Social Icons

Welcome to my Website

Saturday 22 June 2013

ஆங்கிலம் கற்போம் அறிவை வளர்ப்போம்

English Lessons

குறிப்பு:

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் "தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் தன் சமூகம் சார்ந்து தன்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியைச் செய்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு." அந்தவகையில் தான் இந்த  வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எவரும் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எளிதாக எட்டிவிட முடியாது. யப்பான், சீனம், பிரஞ்சு மொழிகளில் போன்று உலகின் அனைத்து கற்கை நெறிகளும், கண்டுப்பிடிப்புகளும் எமது மொழியிலேயே கிடைக்கக்கூடிய நிலையும் இல்லை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கில்லை. தமிழர்களைப் பொருத்த மட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்குமான ஓர் திறவுகோள் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்று நம்மை நாமே கூறிக் கொள்வதில் எந்த சாதனைகளும் தோன்றிவிடப்போவதில்லை. வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற அறிவியல் முன்னேற்றம் மிகுந்த நாட்டு மாணவர்களுடன், எமது இளையத் தலைமுறையினரும் போட்டியிட்டு வெற்றி ஈட்டவேண்டும். உலக அறிவாளிகள் மத்தியில் தான் நாம் அறிவாளிகளாகத் திகழவேண்டும். "யாதும் ஊரே; யாவரும் கேளீர்!" என புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கூற்றுக்கிணங்க, தரணியில் அனைத்து நாடுகளுக்கும் எம்மவர் சென்று அல்லது சென்ற நாடுகளில் எல்லாம் எம்மவர் தமிழர் எனும் இனத்தின் தனித்துவத்தை தடம் பதிக்க வேண்டும். தமிழர் எனும் இனம் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஓர் அறிவார்ந்த இனமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கெல்லாம் அனைத்து நாடுகளுடனான மதிநுட்பத் தொடர்பாடலும் ஆங்கில மொழியின் ஆளுமையும் மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

தமிழர் எனும் இனம்; உலகில் தொன்மையான ஒரு இனமாகும்.  நாம் நாடற்ற இனமல்ல; நாட்டை நாமே அந்நியரிடம் பறிகொடுத்த இனம். இலங்கையில் மாவட்டமாகவும், இந்தியாவில் மாநிலமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஓர் அப்பாவி இனம். இந்த ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து, இழந்த தமிழர் இறையான்மையை மீட்டெடுக்கும் பொறுப்பு எங்கள்  அனைவருக்கும் உண்டு. மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குகளுக்கு முகம் கொடுக்கவும், அரசியல் சாணக்கியர்களாக எம்மை நாமே வளர்த்துக்கொள்ளவும், அறிவார்ந்த சமூகமாக வளரும் எமது இளஞ்சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பும் கூட ஒவ்வொருவருக்கும் உண்டு. ஐநாவில் தமிழர் கொடி ஏற்றும் பொறுப்பும் கூட வளர்ந்து வரும் இளம் தமிழ் சமுதாயத்தினரிடமே உண்டு. அதற்கு ஆங்கில மொழி ஆளுமை அவசியமானது என்பதை எவரும் மறக்கலாகாது.

உலகில் அனைத்து இனத்திற்கும் தன்னினம் மீதும், தன் இனத்தினர் மீதும் ஒரு பற்று உண்டு. அந்தவகையில் "தமிழர் உயர்ந்தால்; தமிழ் தானாகவே உயரும்" எனும் கொள்கை என்னுடையது. அந்நிய நாடுகளுக்கு சென்றால் தான் அந்தந்த நாட்டவர் அவரவர் மொழி மீது எத்தகைய பற்று கொண்டுள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது. தமிழனும் கடல்கடந்து பயணிக்கும் போது தான் தன் இனத்தின் தனித்துவத்தை உணர்வான். தன் மொழி மீது பற்றும் கொள்வான். தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களையும் முன்னெடுப்பான். கிணற்றுத் தவலையாய் உள்ளூருக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பல நாடுகளுக்கும் பயணித்து பாருங்கள்; அதுவே உங்கள் உலக அறிவின் விரிவாக இருக்கும். அக்கடல் கடந்த அறிவுத் தேடலுக்கு ஆங்கிலம் வழி காட்டும்.

எனவே வளரும் தமிழ் இளஞ்சமுதாயத்தினர் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்க வேண்டும்; கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பமும், இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தின் உருவாக்க நோக்கமுமாகும்.

உங்களின் பங்களிப்பு:

இவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே! உங்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.

இன்றைய உலகில் ஆங்கிலம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, வளரும் தமிழ் இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துரையுங்கள். அத்துடன் இந்த  வலைத்தளத்தில் வழங்கப்படும் பாடப் பயிற்சிகள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால் இத்தளத்தை மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும் பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் உங்கள் கணினியின் ஊடாக பயிற்சிகளை தொடர முடியும். கணினி வசதியில்லாதோர் அச்செடுத்து பயன்படுத்தலாம். வசதியுள்ளோர் வசதியில்லாதோருக்கு அச்செடுத்து உதவிடவும் முடியும். 

அது ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும், இத்தளத்திற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பாகவும் இருக்கும்.

நன்றி!
அன்புடன் கேதீஸ்.
கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!
 

No comments: